சூர்யா நடித்து திரைக்கு வந்த காப்பான் திரைப்படத்தில் வில்லன் பூச்சிகளை கொண்டு விவசாயத்தை அழிக்க முயற்சிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும். இதுபோன்ற ஒரு தாக்குதலை இந்தியா மீது பாகிஸ்தான் தொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள. இந்த தகவலின் உண்மைத் தன்மை என்ன என்பதை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
குஜராத் மாநிலத்தின் பனஸ்கந்தா, மெக்சனா, கட்ச், படான், சபர்கந்தா மாவட்ட விவசாய நிலங்களில் லட்சக்கணக்கில் வெட்டுக்கிளிகள் படையெடுத்து பயிர்களை அழித்து வருகின்றன. பருத்தி, உருளைக் கிழங்கு, கோதுமை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதல்களிலிருந்து பயிர்களைக் காப்பாற்ற 11 மத்திய குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. கடந்த 25 வருடங்களில் இதுபோன்ற வெட்டுக்கிளித் தாக்குதல்கள் நிகழ்ந்ததில்லை என்றும் தற்போது வரை சுமார் 12 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் சேதமடைந்துள்ளன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன
மத்திய குழுக்கள் பூச்சித் தாக்குதல்களில் இருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக பூச்சிக் கொல்லிகள் மற்றும் மருந்துப் பொருட்கள் தெளித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளன. உள்ளூர் வாசிகள் டயர்களை எரித்தும் மின்விசிறி கொண்டு ஒலி எழுப்பியும் பூச்சிகளை விரட்ட முயற்சித்து வருகின்றனர். மேளக்காரர்களை அழைத்து வந்து மேளம் அடித்தும் பூச்சிகள் விரட்டப்படுகின்றன
முதலில் பனஸ்கந்தா மாவட்டத்தில் மட்டும் காணப்பட்ட வெட்டுக்கிளிகள் அருகிலுள்ள மாவட்டங்களுக்கும் படிப்படியாக பரவியுள்ளது. இந்த வெட்டுக்கிளிகள் பாகிஸ்தானின் பாலைவனப் பகுதிகளிலிருந்து குஜராத் மாநிலத்திற்குள் ஊடுருவியது குறித்து பல்வேறு தரப்பினரும் சந்தேகக் கணைகளை எழுப்பி வந்தனர்.
காப்பான் படத்தின் இயக்குநரான கேவி ஆனந்தும் இந்த செய்தியை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். காப்பான் படத்தில் இந்தியாவின் விவசாயத்தை அழிக்க வில்லன் பூச்சிகளை அனுப்புவார். தற்போதைய சம்பவமும் பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் நடந்துள்ளதால் இரண்டையும் ஒப்பிட்டு கேவி ஆனந்த் பதிவு செய்துள்ளார்.
எனினும் காற்றின் திசைவேக மாற்றம் மற்றும் ஈரப்பதம் காரணமாக இந்த வெட்டுக்கிளிகள் குஜராத் மாநிலத்திற்குள் படையெடுத்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.