தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் திமுக சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தவர் வேட்பு மனுவைத் திரும்பப் பெற்றதால் ஆத்திரமடைந்த திமுக எம்.எல்.ஏ அவரைத் தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட 3 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த ராஜேந்திரன், தனது வேட்பு மனுவைத் திரும்பப் பெற்றார். இதனையறிந்து அப்பகுதிக்குச் சென்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், ராஜேந்திரனை ஆபாச வார்த்தைகளால் ஏசியதுடன், அவரைத் தாக்கியதோடு, தனது காரில் ஏற்ற முயன்றார். அப்போது அருகிலிருந்த காவல்துறையினர், மகாராஜனிடமிருந்து ராஜேந்திரனை விடுவித்தனர். திமுக சட்டமன்ற உறுப்பினரின் இத்தகைய வெறித்தனமான செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.