ஜப்பானில் இந்தாண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமா?

ஜப்பானில் இந்தாண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தக் கூடாது என்று 80 சதவீத மக்கள் தெரிவித்துள்ளதால், திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் துவங்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா தொற்று காரணமாக இந்தாண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி செய்து வருகிறது. கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல்படி சுடர் ஓட்டமும் நடைபெற்று வரும் நிலையில் உலகம் முழுவதும் இன்னும் முடிவுக்கு வராமல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா காரணமாக இந்தாண்டும் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வருகின்ற ஜுலை 23ம் தேதி துவங்கி ஆகஸ்டு 8ம் தேதி வரை போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜப்பானின் டோக்கியோ, ஒசாகா, கியோட்டோ ஆகிய 10 மாநிலங்களில் கொரோனா காரணமாக கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இன்னும் 10 வாரங்களே உள்ள நிலையில், சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வே ஒன்றில் ஜப்பானில் 80 சதவீத மக்கள் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதில் 43 சதவீதத்தினர் ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்ய வேண்டுமென்றும், 40 சதவீத மக்கள் போட்டிகளை வேறு நாட்டிற்கு மாற்ற வேண்டுமென்றும் தெரிவித்துள்ளனர். மேலும் போட்டிகளை திட்டமிட்டபடி நடத்தலாம் என்று வெறும் 14 சதவீதத்தினரே தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய போட்டியாளர்கள் மற்றும் பணியாளர்களால் கொரோனா தொற்று பரவக்கூடிய ஆபத்து உள்ளது என்று 87.7 சதவீதம் பேர் கவலை தெரிவித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்கப்படும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்படாது என்று போட்டி அமைப்புக் குழுவின் தலைவர் ஷிகோ ஹசி மோட்டோ தெரிவித்திருந்தாலும், போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி விளையாட்டு ஆர்வலர்களிடையே ஏற்பட்டுள்ளது.

Exit mobile version