ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றில், நிகாத் சரீனை வீழ்த்திய மேரி கோம் இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இதில் மகளிர் குத்துச்சண்டையின் 51 கிலோ எடைப் பிரிவில் மேரி கோம் நேரடியாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பார் என இந்திய குத்துசண்டை சங்கத் தலைவர் அஜய் சிங் கருத்து தெரிவித்தார். மற்றொரு வீராங்கனை நிகாத் சரீன், நியாயமான முறையில் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து தனது முடிவை மாற்றிக் கொண்ட குத்துசண்டை சங்கம், தகுதிச் சுற்றுப் போட்டிகளை நடத்தியது. டெல்லியில் நடந்த போட்டியில் மேரி கோம், நிகாத் சரீனை எதிர்கொண்டார். போட்டியின் தொடக்கம் முதலே மேரி கோம் ஆதிக்கம் செலுத்தினார். இறுதியில் 9 க்கு 1 என்ற புள்ளிக் கணக்கில் மேரி கோம் வெற்றி பெற்று இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மேரி கோம், சரீன் சவால் விட்டதைப் பெரிதுபடுத்திச் சர்ச்சையாக்க வேண்டாம் என்றும், தனக்கு அதில் விருப்பமில்லை எனவும் கூறினார். மேலும், எதிர்வரும் போட்டிகளில் பங்கேற்று நாட்டிற்குப் பதக்கத்தை வென்று கொடுப்பதிலே தான் கவனம் செலுத்துவதாகவும் கூறியுள்ளார்.