புவியியலின் வரலாற்றில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களிலேயே மிகவும் பழமையான பொருள் ஒன்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சூரியனை விடவும் மிகப் பழமையான அந்தப் பொருளின் வரலாறு குறித்து விளக்குகின்றது இந்தத் செய்தித் தொகுப்பு…
வானில் இருந்து பூமியில் வந்து விழுந்த ஒரு விண்கல்லை ஆராய்ந்த அறிவியலாளர்கள், அதில் சுமார் 750 கோடி ஆண்டுகள் பழமையான தூசித் துகள்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவுகள் நேஷனல் அகாடமி ஆஃப் சயின்சஸ் கல்வி நிறுவனத்தின் இதழில் வெளியாகி உலகையே வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
சூரிய குடும்பத்தில் முதலாவதாகத் தோன்றிய சூரியனின் வயது 460 கோடி ஆண்டுகள், சூரியனிடமிருந்து பிரிந்து வந்த பூமியின் வயது 454 கோடி ஆண்டுகள் எனும் போது, சூரிய குடும்பத்தைவிடவும் மிகப் பழமையான பொருளாக இந்த 750 கோடி ஆண்டுகள் பழமையான துகள்கள் அறிவியலாளர்களுக்குக் கிடைத்து உள்ளன.
இவை எப்படி உருவாகின்றன என்று பார்த்தால், வானில் உள்ள நட்சத்திரங்கள் ஒருகட்டத்தில் தங்கள் ஒளிரும் தன்மையை இழந்து இறந்து போகின்றன, அப்போது அவை உடைந்து அவற்றின் துகள்கள் அண்டவெளியில் வீசி எறியப்படுகின்றன. அப்படியாக, சூரியனுக்கு முன்பு அண்டவெளியில் இருந்த ஒரு இறந்த நட்சத்திரத்தின் மீதமே இந்தத் துகள்கள் ஆகும்.
புவியில் உள்ள பொருட்களின் வயது பொதுவாக கார்பன் டேட்டிங் முறையில் கார்பனை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுகின்றன. இந்த நட்சத்திரத் துகள் பூமியை விடவும் மூத்தது என்பதால் இதன் வயது காஸ்மிக் கதிர்களைக் கொண்டு கணிக்கப்பட்டு உள்ளது. அதாவது, இந்தத் துகளின் மீது இத்தனைக் காலங்களில் வந்து விழுந்த அண்டவெளியின் காஸ்மிக் கதிர்களின் அளவைக் கொண்டு இந்தத் துகள்களின் வயது கணிக்கப்பட்டு உள்ளது.