உயிருடன் ஃப்ரீசர் பெட்டியில் வைக்கப்பட்ட முதியவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழப்பு!

சேலத்தில், உயிரிழந்துவிட்டதாகக் கூறி ஃப்ரீசர் பெட்டியில் வைக்கப்பட்டு,உயிருடன் மீட்கப்பட்ட முதியவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட கந்தம்பட்டி பகுதியில், பாலசுப்ரமணிய குமார் என்பவர், தனது சகோதரரான சரவணன் என்பவருடன் வசித்து வந்தார். பாலசுப்பிரமணிய குமார் உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்துள்ளார். அவர், இறந்து விட்டதாகக் கூறி, கடந்த 12ம் தேதி ஃப்ரீசர் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளார். அடுத்தநாள் ஃப்ரீசர் பெட்டியை திரும்ப எடுக்க வந்த தொழிலாளர்கள், முதியவர் உயிருடன் துடித்துக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

முதியவர் உயிரோடு இருப்பது குறித்து, அவரது சகோதரரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அவரது ஆன்மா இன்னும் அவரது உடலை விட்டு செல்லவில்லை என்றும், அதனால் தான் அவரது உயிர் பிரியும் வரை உடல் ஃப்ரீசர் பெட்டியில் வைக்கப்பட்டதாகவும் கூறினார். அவரது பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால், காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

உடனடியாக, 108 ஆம்புலன்ஸ் மூலம், சேலம் அரசு மருத்துவமனையில் அந்த முதியவர் சேர்க்கப்பட்டார். ஆபத்தான முறையில், ஒரு சாதனத்தை பயன்படுத்தி உயிருக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ், சரவணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் முதியவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

Exit mobile version