வயது முதிர்வும், உடல் ஊணமும் உழைக்க நினைப்பவர்களுக்கு தடை இல்லை – முதியவர் சிலுவை

ஒருவரின் மன வலிமையே அவர் வாழ்வதற்கும், வாழ்க்கையில் முன்னேறி செல்வதற்கும் உந்துதலாக இருக்கிறது.

இதற்கு உதாரணமாக தூத்துக்குடியை சேர்ந்த முதியவர், தனது காலை இழந்த பின்னரும் பனை தொழிலில் ஈடுபட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அடுத்துள்ள போலையர்புரம் பகுதியை சேர்ந்தவர் சிலுவை.

பனை தொழில் செய்து வரும் இவர், கடந்த15 வருடங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் ஒரு காலை இழந்தார்.

சிறு குறைபாட்டை கூட ஏற்க முடியாமல் மன அழுத்தத்தால் தவிக்கும் பலருக்கு மத்தியில், விடாப்பிடியாக ஒற்றை காலிலேயே பனை ஏறும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

பனை மரம் ஏறுவதற்கு, பெரிய சைஸ் ஏணி ஒன்றை மரத்தில் கட்டிவைத்து ஒற்றை காலுடன் மரத்தில் ஏறுகிறார்.

மரத்தின் உச்சிக்கு சென்றபிறகு மரத்தின் ஓலைகளில் இறுக்கமாக பற்றிக் கொண்டு, அதில் சிறிது நேரம் அமர்ந்து, பதநீரை சுண்ணாம்பு தடவிய மண்பானையில் இருந்து, தான் வைத்திருக்கும் பானையில் ஊற்றி கீழே இறங்குகிறார்.

68 வயதிலும் ஒற்றைக்காலுடன் மரத்தில் ஏறி, பதநீர் இறக்கி விற்பனை செய்து வருகிறார்.

இரண்டு கால்களும் உள்ளவர்களே, பனை மரத்தில் இருந்து கீழே விழுந்து இறக்கும் சம்பவங்கள் பல நடைபெறும் நிலையில், ஒற்றைக்காலில் பனைமரத்தில் ஏறி இறங்குவது அப்பகுதியில் உள்ள அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில், கொரோனா பரவல் காலம் என்பதால் போதிய வருமானமின்றி தவிக்கும் தனக்கு, அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என சிலுவை வலியுறுத்தியுள்ளார்.

 

Exit mobile version