ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த அதிகாரிகள் நடத்திய சோதனையில், லேப்டாப், ஹார்டு டிஸ்க் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
ராமநாதபுரம் அருகே உள்ள பேராவூர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர் வீரபாகுவை கடந்த ஆண்டு மர்ம கும்பல் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ய முயன்றது. இது தொடர்பாக, சிலர் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில், பரமக்குடி முன்னாள் நகர் பொதுச் செயலாளர் முருகன், ராமநாதபுரத்தில் முன்னாள் கவுன்சிலர் நாகராஜ், இந்து முன்னணி மாநிலச் செயலாளர் முனியசாமி ஆகியோர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டனர். இதையடுத்து இந்த வழக்குகள் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. கேரளாவில் தீவிர விசாரணை மேற்கொண்ட என்ஐஏ அதிகாரிகள், கீழக்கரை, தேவிபட்டிணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நான்கு வீடுகளில் நேற்று சோதனை நடத்தினர். அங்கிருந்து மத ரீதியான புத்தகங்கள், ஹார்ட் டிஸ்க், பென்ரைவ், மொபைல் போன், டைரி உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.