பைனான்சியர் மார்ட்டின் கொலை வழக்கில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளருக்கு தொடர்பு இருப்பதாக, கொலை செய்யப்பட்ட மார்ட்டினின் வாக்குமூல வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தைக்கா தெருவைச் சேர்ந்தவர் 45 வயதான மார்டின். பைனான்சியரான இவர், பணம் கொடுக்கல்-வாங்கல் தொழில் செய்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த 10-ம் தேதி, 11 பேர் கொண்ட கும்பலால், சாத்தான்குளம் பள்ளிவாசல் முன்பு சரமாரியாக மார்டின் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில், பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் மார்ட்டின் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக, பாபு சுல்தான், அவருடைய மகன்கள் பாரிஸ், பிலால், சிந்தா, புகாரி, அப்துல் சமது ஆகிய 6 பேரை கைது செய்து, தலைமறைவான மற்றவர்களை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், சாத்தான்குளம் காவல்துறையினரும் தனது தந்தையின் மரணத்திற்கு காரணம் என்று, இறந்த மார்ட்டீனின் மகளும், மார்ட்டீனின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறவந்த இந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மார்ட்டின் கொலையில் கைது செய்யப்பட்டுள்ள பாபு சுல்தான் உள்ளிட்டோர், ஏற்கனவே பணத்தகராறில், மார்ட்டின் மீது சாத்தான்குளம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்து, பின் போலீசார் மார்ட்டீனை சட்டவிரோதமாக சாத்தான்குளம் காவலர் குடியிருப்பில் வைத்து தாக்கியதாக புகார் உள்ளது.
இந்த நிலையில், மார்ட்டீன் இறப்பதற்கு முன்பாக வெளியிட்ட வாக்குமூலம் தற்போது வெளியாகியுள்ளது.
அதில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ராஜா என்பவர், தன்னை தீர்த்துக்கட்டப் போதவாக மிரட்டியதாக மார்ட்டீன் தெரிவித்துள்ளார்.
மேலும், மார்ட்டீனின் மகளிடம் “உனது அப்பா மார்ட்டின் நாங்க அடித்தபோது தப்பிவிட்டான், ஆனா உங்க அப்பா விரைவில் சாவ போறான்” எனக் கூறியதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
மார்ட்டினின் இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சம்பத்தப்பட்ட காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இந்து முன்னணி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், தந்தை, மகன் ஜெயராஜ் பெண்ணிக்ஸ் கொலை நடைபெற்று ஒரு வருடம் முடிவதற்குள், மீண்டும் ஒரு கொலை வழக்கில் சாத்தான்குளம் போலீசார் சம்பந்தப்பட்டிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
Discussion about this post