வாகன சோதனையின் பொழுது பறிமுதல் செய்த பணத்தை திரும்ப ஒப்படைக்க 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை ஆவடியை சேர்ந்த ஜெய்குகன் என்பவர், காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பணியில் இருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரியான பாபு, கோயம்பேடு காவல் உதவி ஆய்வாளர் வாசுதேவன், காவலர்கள் கார்த்திகேயன், வீரமணி ஆகியோர் ஜெய் குகன் வாகனத்தை வழிமறித்து சோதனை நடத்தினர். அப்பொழுது ஜெய்குகன் வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து, 50 ஆயிரம் வரை எடுத்து செல்ல அனுமதி இருப்பதாக கூறி ஜெய்குகன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாக தெரிகிறது. இறுதியில் 2 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கிய அதிகாரிகள் ஜெய்குகனை அனுப்பி உள்ளனர்.
இது தொடர்பாக ஜெய்குகன் காவல்நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. புகாரில் அடிப்படை முகாந்திரம் இருந்த நிலையில் நான்கு பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.