மக்களை தேடி அதிகாரிகள் சென்று குறைதீர்க்கும் நிகழ்வு, மகிழ்சியில் பொது மக்கள்

மக்களை அதிகாரிகள் தேடிச் சென்று அவர்களின் குறைகளை தீர்க்க விதமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவாக்கிய தமிழக அரசின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கைகள் எடுக்கும் இந்த திட்டத்திற்கு பல தரப்பட்ட மக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு தமிழக அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன் அடிப்படையில், ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டமும், ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் வட்டாட்சியர் தலைமையில் அம்மா திட்ட முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் குறைகளுக்கு தீர்வு காண்பதற்கான சிறப்பு குறை தீர்வு முகாம்களும் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த குறைதீர் நிகழ்வுகளில் பட்டா மாற்றம், சமூக பாதுகாப்பு திட்டம் மற்றும் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் முதியோர் ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம், இலவச வீட்டு மனைப்பட்டா, சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் போன்ற சான்றிதழ்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது.

சிறப்பு குறை தீர்வு திட்டத்தின் மூலம், மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவுப்படி ஒரு குறிப்பிட்ட நாளில் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை அல்லது நகர்புற வளர்ச்சித் துறை மற்றும் பிற துறைகளைச் சார்ந்த அலுவலர் குழு, ஆகஸ்ட் மாத இறுதிக்குள் நேரில் சென்று மனுக்களைப் பெறுவார்கள் என்றும், இம்மனுக்கள் அனைத்தும் கணினியில் பதியப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைக்கு ஒரு வார காலத்திற்குள் அனுப்பப்பட்டு, அம்மனுக்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் தீர்வு எட்டப்படும் என்றும் முதல்வர் அறிவித்திருந்தார்.

இந்த மனுக்களின் மீதான தீர்விற்குப் பின், செப்டம்பர் மாதத்தில் அமைச்சர்கள் தலைமையில் வட்ட அளவிலான விழாக்கள் நடத்தப்படும் என்றும் பல்வேறு நலத் திட்டப் பயன்களை இவ்விழாவில் வழங்குவதோடு, மக்களின் அடிப்படை தேவைகளுக்கும் இவ்விழாவின் போது தீர்வு காணப்படும் என்றும் முதல்வர் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து சேலம் எடப்பாடி தொகுதியில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டத்தினை கடந்த 19 ஆம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அதன்படி தமிழகம் முழுவதும் இந்த சிறப்பு குறை தீர்வு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

எந்த ஒரு சிரமும் இல்லாமல், அலைச்சலும் இல்லாமல் ஒரே இடத்தில் அதிகாரிகளே நேரில் வந்து மனுக்களை பெற்று செல்வதும், அந்த கோரிக்கை மனு மீது ஒரு மாதத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் பொது மக்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் தொழில் வளத்தை மேம்படுத்தி வேலைவாய்ப்பை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தமிழக அரசு, பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருவது பல தரப்பினரிடத்திலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Exit mobile version