நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பெருகி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த போர்கால அடிப்படையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மண்டலமாக பிரிக்கப்பட்டு, மண்டலத்திற்கு ஒரு கண்காணிப்பு குழுவும், மாவட்டத்திற்கு ஒரு கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, பிராண வாயு தேவையினை கண்காணிக்க அனாமிகா ரமேஷ் ஐ.ஏ.எஸ் அதிகாரியும்,
அத்தியாவசிய மருந்துகள் இருப்பினை கண்காணிக்க கௌரவ் குமார் ஐ.ஏ.எஸ் அதிகாரியும்,
மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இருப்பினை கண்காணிக்க ஐஸ்வர்யா
மற்றும் கட்டா ரவி தேஜா ஆகிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
நியமனம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், வருகிற 29ம் தேதி முதல் மே மாதம் 12ம் தேதி வரை சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.