உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அலுவலகமும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் கேட்கும் தகவல்களைக் கொடுக்கக் கடமைப்பட்டது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகக் கேரளத்தைச் சேர்ந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் இருந்தபோது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி அவரது அலுவலகம் தொடர்பாகத் தகவல் கேட்டு எஸ்.சி.அகர்வால் என்பவர் மனு அளித்திருந்தார். தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தலைமை நீதிபதியைக் கொண்டுவருவது நீதிமன்றத்தின் சுதந்திரச் செயல்பாட்டுக்கு எதிராக அமையும் எனக் கூறி அவரது கோரிக்கை மறுக்கப்பட்டது. தலைமை நீதிபதியும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல் அளிக்கக் கடமைப்பட்டவர் என மத்தியத் தகவல் ஆணையர் அலுவலகம் தெரிவித்துவிட்டது. இது தொடர்பான வழக்கில் 2010ஆம் ஆண்டில் டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பிலும் இதை உறுதிப்படுத்தியது. டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தின் செயலாளரும் அதன் தகவல் ஆணையரும் செய்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் ரஞ்சன் கோகோய், ரமணா, சந்திரசூட், தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது. அதில் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அலுவலகமும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல் அளிக்கக் கடமைப்பட்டது தான் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.