71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 68 புள்ளி 5 அடியைத் தாண்டியதையடுத்து, கரையோர மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணை உள்ளது. வெள்ளிமலை, மேகமலை, வருசநாடு, குமுளி மலை ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மூலம் இந்த அணைக்கு நீர்வரத்து உள்ளது.
இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை நன்றாக பெய்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் வைகை அணை 60 அடியை எட்டியது. அதன்பின்னர் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ராமநாதரம் ஆகிய மாவட்ட பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டது. அணையிலிருந்து குடிநீருக்கும், விவசாய பாசனத்திற்கும் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் சில தினங்களாக அணையின் நீர்மட்டம் சரிந்து வந்தது.
இந்நிலையில் வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதாலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ததாலும், முல்லை பெரியாறு அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீராலும் அணைக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் வந்தது.
கடந்த திங்கட்கிழமை அணையின் நீர்மட்டம் 66 புள்ளி பூஜ்யம் ஒன்று அடியாக
உயர்ந்தது. இதையடுத்து வைகை கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்தநிலையில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வந்ததாலும், அணையில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டதாலும் வைகை அணையின் நீர்மட்டம் 68 புள்ளி 5 அடியை எட்டியது.
இதனால் கரையோர மக்களுக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றின் கரையோரம் செல்லவும், குளிக்கவும் தடை
விதிக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 92 கனஅடியாக அதிகரித்துள்ளதால் இன்னும் இரு தினங்களில் அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.