பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மழை நீர் சேகரிப்பாக மாற்றும் தமிழகத்தின் புதுமையான யோசனைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டின் முதல் மனதின் குரல் நிகழ்ச்சியில் வானொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது பரிந்துரைகளையும், அனுபவங்களையும் தெரிவிக்க மனதின் குரல் நிகழ்ச்சி, சிறந்த தளமாக உருவாகி வருவதாக பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மழை நீர் சேகரிப்பாக மாற்றும் தமிழகத்தின் புதுமையான யோசனைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். தமிழகத்தில் தோன்றிய பல எண்ணற்ற யோசனைகள் மூலம் வலுவான இந்தியா உருவாகி வருவதாக பிரதமர் கூறினார். இந்தியாவில் உள்ள மாநிலங்களின் கலாசாரம், மற்றும் இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், கேலோ இந்திய பல்கலைக்கழக போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் முதல் பதிப்பாக ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், வரும் பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறும் என்றும், இதில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளதாகவும் பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார். இது இளம் விளையாட்டு வீரர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும் என்றும் அப்போது பிரதமர் தெரிவித்துள்ளார்.