தமிழகத்தில் நீர்வள ஆதாரத் துறை மற்றும் பொதுப்பணித் துறையின் கீழ் 25 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தருமபுரி மாவட்டம் புனரமைக்கப்பட்ட மாரியம்மன் கோவில் பள்ளம் அணைக்கட்டு, கிருஷ்ண்கிரி மாவட்டம் பாரூர் மற்றும் பெண்டறஹள்ளி கிராமங்களில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள், திருவண்ணாமலை மாவட்டம் அம்மாபாளையம் கிராமத்தில் நாகநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை உள்ளிட்ட முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
மேலும் கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை பொதுப்பணித் துறை வளாகத்தில் 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் அலுவலகக் கட்டடத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
மொத்தம் 25 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நீர்வள ஆதாரத் துறை மற்றும் பொதுப்பணித்துறைகளின் முடிவுற்ற திட்டப் பணிகளை அவர் திறந்து வைத்தார்.
இந்த திட்ட பணிகள் மூலம் விவசாயத்தை மேம்படுத்தவும், மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யவும், நீர் நிலைகளின் நீர் மட்டத்தை உயர்த்தவும், புதிய நீராதாரங்களை உருவாக்கிடவும் முடியும் என்று பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.