க.அன்பழகனின் மறைவு தமிழகத்துக்கு பேரிழப்பு -முதலமைச்சர்

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் மறைவு தமிழகத்துக்கு பேரிழப்பு என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், பேராசிரியர் க.அன்பழகன் இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் கொண்டவர் என்றும், கலைஞர் கருணாநிதியின் அரசியல் பயணத்தின் நெடுகிலும் உற்ற தோழராகவும், திராவிட இயக்க கொள்கையில் இருந்து விலகாத உறுதி மிக்க மூத்த அரசியல்வாதியாகவும் விளங்கியவர் எனவும் குறிப்பிட்டுள்ளார். க.அன்பழகன் 9 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என தெரிவித்துள்ள முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஆகிய பதவிகளில் திறம்பட பணியாற்றியவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். அரசியல்வாதி, ஆசிரியர், மேடை பேச்சாளர், எழுத்தாளர் போன்ற பல பரிமாணங்களால் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தியவர் எனவும், க.அன்பழகனின் மறைவு தமிழகத்துக்கு பேரிழப்பாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அன்பழகனின் குடும்பத்தினருக்கும், திராவிட முன்னேற்றக்கழகத்துக்கும் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.      

Exit mobile version