தன்னைக் கொல்ல வந்த கழுகிற்கு மரண பயம் காட்டிய ஆக்டோபஸ்சின் வீடியோ காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மீன்கள் கழுகுகளிடம் மாட்டுவது உண்டு. ஆனால், ஆக்டோபஸ்சிடம் கழுகு ஒன்று வசமாக சிக்கிக் கொண்ட விநோத நிகழ்வு கனடா நாட்டில் நடந்துள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள வான்கூவர் கடற்கரையின் கழிமுகப் பகுதியில், பல்வேறு உயிரினங்கள் உள்ளன. அங்கு சாலமோன் மீன்களைப் பிடிக்கச் சென்ற மீனவர்கள் தான், ஆக்டோபஸ்சிடம் பால்ட் ஈகிள் என அறியப்படும் வெண்தலைக் கழுகு சிக்கித் தவிக்கும் விநோதக் காட்சியை முதன் முதலாகக் கண்டுள்ளனர்.
கடலில் மீன்களைப் பிடிப்பதைப் போலவே, ஆக்டோபஸ்ஸையும் பிடிக்க அந்தக் கழுகு முயன்று உள்ளது. ஆனால் ஆக்டோபஸ் தனது கரங்களால் கழுகைச் சுற்றி வளைத்ததால், அதனால் பறக்க முடியவில்லை. கழுகை பறக்கவிடாமல் தடுத்த ஆக்டோபஸ், அதை நீருக்குள் இழுத்துக் கொல்லவும் விரும்பவில்லை, கழுகை விடுவித்தால் தனக்கு ஆபத்து வரும் என்று எண்ணி, ஆக்டோபஸ் அந்த கழுகை இறுக்கப் பிடித்துக் கொண்டது.
இதனைப் பார்த்த மீனவர்கள் தாங்கள் வைத்திருந்த ஈட்டியைக் கொண்டு ஆக்டோபஸ்சின் கைகளில் குத்தி அந்தக் கழுகை விடுவித்தனர். கடந்த வெள்ளிக் கிழமை நடந்த இந்த சம்பவத்தின் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.இந்த காட்சிகளை பார்த்தவர்கள், ஆக்டோபஸ்சைப் பாராட்டியும், கழுகின் மீது பரிதாபப்பட்டும் பலவித கருத்துகளைக் கூறி வருகின்றனர்.