தமிழ்நாட்டில் காலியாக உள்ள இரண்டு மாநிலங்களவை இடங்களுக்கு அக்டோபர் 4ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் மூன்று மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ளன. அதிமுக எம்.பி. முகமது ஜான் மறைவை தொடர்ந்து காலியாக உள்ள அந்த இடத்திற்கு வருகிற 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு அக்டோபர் 4ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிமுக எம்.பி.க்கள் கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக தேர்வானதை அடுத்து அந்த இரண்டு இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு செப்டம்பர் 15ம் தேதி முதல் வேட்பு மனுத் தாக்கல் தொடங்கும் என்றும் வேட்பு மனுத் தாக்கல் செய்ய செப்டம்பர் 22ம் தேதி கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 23ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெற செப்டம்பர் 27ம் தேதி கடைசி நாளாகும். அக்டோபர் 4ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இடைத்தேர்தல் நடைபெறும். அன்றைய தினம் மாலை 5 மணிக்கே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவு அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதே போன்று புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசங்களில் தலா ஒரு இடத்தில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.