அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 66.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி, சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு அதிகாலை 5 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி காலை 6:45 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார். “அன்பும், பண்பும் ஒருங்கே அமையப் பெற்ற சகோதரர் ஓ.பன்னீர்செல்வம், இந்த பேரிழப்பை எப்படி தாங்கப் போகிறார்” என்பதை எண்ணி கண்ணீர் வடிப்பதாக இரங்கல் செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ஆர்.பி.உதயகுமார், சி.விஜயபாஸ்கர், காமராஜ், கே.பி.அன்பழகன், உடுமலை ராதாகிருஷ்ணன், ஓ.எஸ்.மணியன், சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதேபோன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார். மனைவி விஜயலட்சுமியை இழந்துவாடும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்வதாக ஆளுநர் பன்வாரிலால் குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மறைவு செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்ததாக கூறியுள்ளார். அவரை இழந்து வாடும் சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.