4-வது ஒருநாள் போட்டி: நியூஸி. அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி

 

இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியில், நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூஸிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்தநிலையில், 4-வது ஒரு நாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது.

டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி இந்தியாவை பேட் செய்ய பணித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய தவான் 13 ரன்களிலும், ரோகித் ஷர்மா 7 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். நியூசிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

30 புள்ளி 5 ஓவர்களில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 92 ரன்கள் மட்டுமே எடுத்தது. 93 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய நியூஸிலாந்து வீரர்கள் இந்திய அணியின் பந்து வீச்சை திறம்பட எதிர்கொண்டு ரன் சேர்ந்தனர்.

14 புள்ளி 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நியூஸிலாந்து அணி, 93 ரன்களை எடுத்து எளிதில் வெற்றி பெற்றது.

நியூஸிலாந்து தரப்பில் 4 மெய்டன் ஓவர்களை வீசியதோடு, 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ட்ரெண்ட் போல்ட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வெலிங்டனில் வரும் 3-ந் தேதி நடைபெற உள்ளது.

Exit mobile version