உலக நாடுகள் பாராட்டும் திட்டம் தமிழகத்தின் சத்துணவு திட்டம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் சத்துணவுத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை சென்னை திருவான்மியூரில் உள்ள அரசு பள்ளியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் சத்துணவுத்துறை அமைச்சர் சரோஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அக்சய பாத்ரா என்ற தொண்டு நிறுவனம் மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை இன்று முதல் துவக்கியுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய சத்துணவுத்துறை அமைச்சர் சரோஜா, சத்துணவு திட்டம் மூலம் உலகத்திற்கே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்வதாக தெரிவித்தார்.
43 ஆயிரம் சத்துணவு மையங்கள் மூலமாக 17 லட்சம் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் சத்துணவு வழங்கப்படுவதாக கூறிய அவர், சத்துணவு திட்டத்திற்காக இந்த ஆண்டு ஆயிரத்து 572 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.