இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் வூகான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் 152-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் 2 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 107ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 31 பேரும், கேரளாவில் 22 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, டெல்லியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு ராம் மனோகர் லோகியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார்.

லண்டனை சேர்ந்த பயணிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால், கொச்சியில் இருந்து துபாய்க்கு புறப்பட இருந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. கேரள மாநிலம் கொச்சியில் இருந்து துபாய்க்கு 289 பயணிகளுடன், எமிரேட்ஸ் விமானம் புறப்பட இருந்தது. அந்த விமானத்தில் இருந்த லண்டனை சேர்ந்த பயணிக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து விமானம் ரத்து செய்யப்பட்டதுடன், பயணிகள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்ட நபரை தனிமைப்படுத்த மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

Exit mobile version