மீண்டும் அணு ஆயுத சோதனையில் ஈடுபட உள்ளதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் புத்தாண்டு உரையில் அறிவித்து உள்ளார்.
ஆணு ஆயுதங்களை வடகொரியா தொடர்ந்து சோதித்து வந்ததால் அந்நாட்டின் மீது அமெரிக்கா தொடர்ந்து பல தடைகளை விதித்து இருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகளால் ஓராண்டுக்கு அணு ஆயுதங்களை சோதனை செய்வதில்லை என்று வடகொரியா அறிவித்தது. ஆனால் அதற்குள் பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தது. ஆனால் அமெரிக்காவோ ‘வடகொரியா தனது அனைத்து அணு ஆயுதங்களையும் ஒப்படைத்தால் மட்டுமே தடை நீக்கம்’ – என்று மறுத்துவிட்டது. இந்நிலையில் வடகொரியா, அமெரிக்காவுக்குக் கொடுத்த காலக்கெடு
கடந்த 2019ஆம் ஆண்டுடன் விடைபெற்றது.
இந்நிலையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் 2019ஆம் ஆண்டின் இறுதி நாட்களில் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக கட்சியின் மூத்த அதிகாரிகளுடன் திடீர் பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த சனிக் கிழமை தொடங்கிய இந்தப் பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமைவரை தொடர்ந்து நடந்ததாக வடகொரிய அரசின் அதிகாரபூர்வ ஊடகம் தெரிவித்தது.
இந்த திடீர் பேச்சுவார்த்தையில், வெளியுறவு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், நாட்டின் பாதுகாப்பையும் இறையாண்மையையும் பாதுகாப்பதற்கு நேர்மறையான மற்றும் தாக்குதல் நடவடிக்கைகள் அவசியம் என அதிபர் கிம் ஜாங் உன் கூறியதாகவும் வடகொரிய அரசின் செய்தி ஊடகம் கூறி உள்ளது. மேலும் அந்நாட்டின் அதிகாரிகள் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறின.
இதனால் வடகொரிய அதிபரின் புத்தாண்டு உரையில் அணுஆயுதங்கள் மற்றும் தாக்குதல்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக தனது புத்தாண்டு உரையில் ‘இனியும் பொறுமை காப்பதில் அர்த்தம் இல்லை, மீண்டும் அணு ஆயுத சோதனையில் வடகொரியா ஈடுபடும்’ – என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கூறி உள்ளார். இந்தப் பேச்சு ஆசியா, அமெரிக்கா ஆகிய இரு கண்டங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு தரப்பில் யார் அணு ஆயுதப் போரைத் தொடங்கினாலும் அது ஒட்டுமொத்த உலகையும் பாதிக்கும்.
சீனாவுடனான வர்த்தகப் போரை சமீபத்தில் முடிவுக்குக் கொண்டு வந்துள்ள அமெரிக்க அரசு, வடகொரியாவுடனான ஆணுஆயுதப் போட்டியையும் முடிவுக்குக் கொண்டுவருமா? – என்பதை காலம்தான் நமக்குக் கூற வேண்டும்.