நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமார் மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றதை அடுத்துத் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளது. விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ராதாமணி காலமானதை அடுத்து அந்தத் தொகுதியும் காலியாக உள்ளது. இந்நிலையில் இரு தொகுதிகளுக்கும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டெல்லியில் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, இதை அறிவித்தார். இரு தொகுதிகளுக்கும் வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்யக் கடைசி நாள் செப்டம்பர் 30ஆம் தேதி. வேட்பு மனுக்கள் பரிசீலனை அக்டோபர் ஒன்றாம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற அக்டோபர் 3ஆம் தேதி கடைசிநாளாகும். அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அக்டோபர் 21ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 24ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்படும்.

Exit mobile version