குடித்துவிட்டு கடிக்கலாம்… கடித்துக்கொண்டே குடிக்கலாம்… என்பதற்கு பொருத்தமாக பிஸ்கெட் டீ கப்பை கண்டுபிடித்து அறிமுகம் செய்துள்ளார் மதுரையைச் சேர்ந்த ஒருவர். பிஸ்கெட் டீ கப் பற்றிய சுவாரசியமான செய்தித் தொகுப்பு. உணவு… பண்பாடு… கலாச்சாரம்… என அனைத்திலும் மதுரை மாநகரத்திற்கென்று தனி பெருமையும், வரலாற்றுப் பாரம்பரியமும் உள்ளது. குறிப்பாக மதுரை உணவு வகைகளுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அதுபோல், தமிழகம் மட்டுமல்லாது, இந்தியாவின் பிற மாநிலங்களிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும், மதுரை உணவகங்கள் கடைவிரித்துள்ளன. உணவு வகைகளைத் தயாரிப்பதில் புதுமையையும், வியாபார யுக்தியில் புதிய முயற்சிகளையும் செய்வதில் மதுரை வியாபாரிகள், கைதேர்ந்தவர்கள். டீ மற்றும் வடையுடனே மதுரைவாசிகளின் பெரும்பாலான காலைப் பொழுதுகள் விடிகிறது. அப்படி உணவு வகைகளில் அதிக ஆர்வம் காட்டும் மதுரை மக்களுக்கு, பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை பல சிக்கல்களை ஏற்படுத்தியது. அதற்கு மாற்று ஏற்பாடு செய்தாக வேண்டும் என்று எண்ணிய மதுரை மேற்குவெளி வீதியைச் சேர்ந்த விவேக் சபாபதி என்பவர், பிஸ்கட் கப் டீ என்ற புதிய உணவுப் பொருளை அறிமுகம் செய்துள்ளார். பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் டீ – கப் களை டீ குடித்தபிறகு தூக்கி எறிய வேண்டிய நிலையை மாற்றி, டீ குடித்தபிறகு, அதை தூக்கி எரியாத மாதிரி செய்ய வேண்டும் என ஐஸ் கிரீம் கோன் போன்று வேர்ப்பர் பிஸ்கட் டீ கப் செய்துள்ளார். ((இந்த பிஸ்கெட் டீ கப்பை, மதுரையின் பிரபல தலைவலி தைலம் தயாரிக்கும் நிறுவனம், தங்களின் புதிய டீ-கடையில் அறிமுகம் செய்துள்ளது.)) இந்த பிஸ்கெட் டீ கப், 10 நிமிடம் வரை டீயை தாங்குகிறது. சூடாவதும் இல்லை. மக்களும் டீயைக் குடித்தபிறகு, கப்பாக பயன்பட்ட பிஸ்கெட்டைக் கடித்து சாப்பிடுகின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் இந்த பிஸ்கெட் டீ-கப், வரவேற்பை பெற்றுள்ளது. தற்போதைய நிலையில், இதனை வாங்க கூடுதல் செலவு பிடிப்பதால், ஒரு டீயின் விலை 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தற்போது, ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தனது நண்பருடன் சேர்ந்து இந்தக் கப்பைத் தயாரித்து விற்பனை செய்து வருவதாகவும், தெரிவிக்கிறார் விவேக் சபாபதி. பிஸ்கெட் கப்பில் டீ அருந்துவது புதுமையாக இருந்தாலும், அதனை கடித்துச் சாப்பிடும் போது ஒரு புத்துணர்வு கிடைப்பதாக, வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
டீக்கடை உரிமையாளரான சபாபதி கூறுகையில், இந்த பிஸ்கெட் டீ கப்பை அறிமுகம் செய்திருப்பது எங்களுக்கு மேலும் பெருமை சேர்க்கும் என்றும், இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார். மக்களுக்குப் பயன்படும் வகையிலும், மனதை கவரும் வகையிலும் எந்தப் ஒரு புதிய விஷயம் உருவாக்கப்பட்டாலும், அது பெரும் வரவேற்பை பெறும் என்பதற்கு மீண்டும் ஒரு உதாரணமாக திகழ்த் தொடங்கியிருக்கிறது இந்த பிஸ்கட் டீ கப்.