சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் அனைத்துப் பெண்களுக்கும் தற்போதைய சூழலில் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்துப் பல்வேறு அமைப்புகள் தாக்கல் செய்த சீராய்வு மனுக்களை விசாரித்த 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு, வழக்கு விசாரணையை 7 பேர் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த நிலையில் சபரிமலைக்கு அவ்வப்போது பெண்கள் செல்ல முயன்று வரும் நிலையில், சபரிமலை வரும் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க முடியாது எனக் கேரள அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது. இந்த நிலையில் சபரிமலை செல்வதற்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி, பாத்திமா, பிந்து உள்ளிட்ட மூன்று பெண்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தற்போதைய சூழலில் சபரிமலை செல்லும் அனைத்துப் பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் ஏற்கெனவே பாதுகாப்பு கோரிய பெண்களுக்கு மட்டும் பாதுகாப்பு வழங்க உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சரத் அரவிந்த் பாப்தே உத்தரவிட்டார்.