வடமாநில தொழிலாளர்களுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடத்தி வைத்து, பணம் பறித்த 7 பேர் கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். வயிற்றுப் பிழைப்புக்காக தமிழகம் நோக்கி வரும் வடமாநில தொழிலாளர்களுக்கு கூட விடியா ஆட்சியில் போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது… இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் வால்மீகி .இவர் தனது நண்பர்களான ஜிதேந்திர குமார், வினய்குமார், பவன்குமார், அசோக்குமார், சித்தார்ய குமார் ஆகியோருடன் கடந்த 14 ஆம் தேதி பீகாரில் இருந்த வேலை தேடி கேரளாவிற்கு ரயில் மூலம் வந்துள்ளார். அப்போது பீகாரை சேர்ந்த பிபீன் குமார் என்பவர் தனது நண்பர் மூலமாக வால்மீகியைத் தொடர்பு கொண்டு வேலை வாங்கித் தருவதாகவும், உடன் இருக்கும் நண்பர்களையும் அழைத்து ஈரோடுக்கு வருமாறும் கூறியுள்ளார்.
இதனை நம்பி ஈரோடு வந்த வால்மீகி மற்றும் அவரது நண்பர்களை ஈரோடு பெரிய சேமூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்ற பிபீன் குமார், அங்கு அவர்களை அடைத்து வைத்து ஒவ்வொருவரும் பத்தாயிரம் முதல் 20 ஆயிரம் வரை பணம் வழங்கினால் மட்டுமே விடுவிப்பேன் என மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வால்மீகி மற்றும் அவரது நண்பர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் பீகாரில் உள்ள தங்களது உறவினர்களை தொடர்பு கொண்டு தலா 10 ஆயிரம் ஜிபே மூலமாக அனுப்பி வைத்து உள்ளனர்.
பணம் வந்த உடனே பிபீன் குமார் மற்றும் அவரது நண்பர்கள் கடத்தி வைத்து இருந்த 6 பேரையும் நன்றாக அடித்தும், வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியும் கூறி டெம்போ டிராவலர் மூலமாக அவர்களை கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் விட்டுச் சென்றுள்ளனர்.
இதையடுத்து சென்னையில் உள்ள தனது நண்பர்களைத் தொடர்பு கொண்டு, நடந்தவற்றைக் கூறியுள்ளார் வால்மீகி. அவர்கள் சென்னைக்கு வரக் கூறியதன் பேரில் வால்மீகியும் அவரது நண்பர்களும் சென்னை புறப்பட்டுள்ளனர். காயத்திற்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த சென்னை போலீஸார், ஈரோடு மாவட்ட போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த ஈரோடு போலீஸார், பிபீன் குமார் மற்றும் அவனுக்கு உதவியாக இருந்த ஈரோட்டைச் சேர்ந்த தமிழ் செல்வன், சுபாஷ், பிரகாஷ், சசிகுமார், பூபாலன் ,கண்ணன் உள்ளிட்ட 7 பேரையும் கைது செய்து, அவர்கள் வைத்திருந்த டெம்போ டிராவலரையும் பறிமுதல் செய்தனர்.
தலைமறைவாக உள்ள இவர்களது கூட்டாளிகள் புகழேந்தி, மோதிலால் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர். வேலை தேடி பல ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகம் வந்த பிபீன் குமார், இங்குள்ள நபர்களுடன் கூட்டு சேர்ந்துகொண்டு வேலை தேடி வரும் வடமாநில தொழிலாளர்களை மிரட்டி பணம் பறித்து சம்பாதிக்க முடிவு செய்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.
விடியா ஆட்சியில் வயிற்றுப் பிழைப்புக்காக வரும் வடமாநில தொழிலாளர்களுக்கு கூட பாதுகாப்பு இல்லாத சூழல் தமிழகத்தில் நிலவுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Discussion about this post