91 வயதிலும் இளைஞர்களை போல் உடற்பயிற்சியில் அசத்தும் கோவை முதியவர்

கோவையில் 400க்கும் மேற்பட்ட மாரத்தான் ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்று, உடற்பயிற்சி கூடங்களில் தினமும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார், 91 வயது இளைஞன்.

மனித வாழ்வில் 60 வயதுக்கு மேல் ஆனாலே நிலை தடுமாறி வீட்டில் முடங்கிவிடும் முதியவர்களுக்கு மத்தியில் 91வயதைக் கடந்தும் இளைஞனாக வளம் வருகிறார், கோவை காந்திபுரத்தை சேர்ந்த முதியவர் தேவராஜ். பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற இவருக்கு உடல் நலம் மீது சிறு வயது முதலே ஆர்வம் அதிகம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை உணர்ந்த இவர், அதிகாலையில் உடற்பயிற்சி செய்வதை சிறு வயதிலிருந்து தற்போது வரை வாடிக்கையாக் கொண்டு மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறார்.

சிறுவயதிலிருந்து விளையாட்டுப் போட்டிகளில் இருந்த ஆர்வம் காரணமாக உடற்பயிற்சிக்குள் நுழைந்த தேவராஜ் தற்போது முதியவர்களுக்கு நடைபெறும் பவர் லிப்டிங் போட்டியில் கலந்து கொண்டு அசத்தி வருகிறார். தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பதக்கங்களை வாங்கிக் குவித்துள்ளார். தமிழகத்தில் 91 வயதில் பவர் லிப்டிங் போட்டிகளில் கலந்துகொள்ளும் ஒரே முதியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமூகம் மீது ஆர்வம் கொண்டவரான இவர் இந்த வயதிலும் தொடந்து மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார். இதுவரை 400-க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.

மனித வாழ்வை பூரணமடையச் செய்யும் நல்லொழுக்கம், நற்பண்பு , ஆகியவற்றைப் பெறுவதற்கு உடற்பயிற்சியே அடிப்படை என்ற அழுத்தமான சிந்தனையை கொண்டுள்ளார் தேவராஜ். இவர் தனது பேரன் பேத்திகளை மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்ள வைப்பதுடன், தன்னிடம் உள்ள ஆரோக்கியமான பழக்க வழக்கத்தின் மூலம் தனது குடும்பத்தினருக்கும் உடற்பயிற்சியின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறார்.

மேலும் இவரை கண்டபோது மிகப்பெரிய ஆச்சரியத்தில் திழைத்ததாகவும், இவரை போல் இளைஞர்கள் உடற்பயிற்சி மேற்கொண்டால் வாழ்வில் நிச்சயம் நோய் அண்டாது என்கிறார், திரைப்பட துணை நடிகர் சக்திவேல்.

உடல்நலத்திற்கு கேடு வந்த பின், உடல் பயிற்சியை நாடிச் செல்லாமல், அனுதினமும் உடற்பயிற்சியை கடைபிடித்தால் நலமான வாழ்வு நிச்சயம் என்பதில் ஐயமில்லை..

Exit mobile version