தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தேர்தல் விதிமுறைகளை மீறி நடந்து கொண்ட அமமுகவினர் காவல் துறையினருடன் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேட்புமனு தாக்கல் செய்ய ஊர்வலமாக வந்த அமமுகவினர் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையை அடைத்து கொண்டு சென்றனர். அவர்களை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்றனர்.
எனினும் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், காவல் துறையினரை மீறி வட்டாட்சியர் அலுவலகம் சென்றனர். வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளருடன் செல்வதற்கு 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், விதிகளை மீறி அமமுகவினர் உள்ளே நுழைய முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.