தான் பதவி விலகியதற்கு யாரும் காரணம் இல்லை என திரைப்பட இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
2019ம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவராக, கடந்த மாதம் 10ம் தேதி இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் சங்க பொதுக்குழு தீர்மானத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து மற்ற பதவிகளுக்கான தேர்தல் வேலைகள் நடைபெற்று வந்தன. இதனிடையே இறுதிப்பட்டியல் வெளியாகும் முதல்நாள், தலைவர் பதவியில் இருந்து தான் விலகி கொள்வதாக இயக்குநர் பாரதிராஜா தெரிவித்தார். அப்போது சில தயாரிப்பாளர்களின் வற்புறுத்தல் காரணமாக பதிவு விலகியதாக தகவல்கள் வெளியாகின. இதனால் வரும் 14ம் தேதி நடைபெறுவதாக இருந்த சங்க தேர்தல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் சங்க தலைவர் பதவியை, மீண்டும் இயக்குநர் பாரதிராஜா ஏற்று சங்கத்தை வழிநடத்த வேண்டும் என இயக்குநர்கள் பாரதிராஜா அலுவலகத்தில் கடிதம் வழங்கினர். இதற்கு தற்போது இயக்குனர் பாரதிராஜா விளக்கம் அளித்துள்ளார். அதில், தான் யாருடைய வற்புறுத்தலின்பேரிலும் பதவி விலகவில்லை என்றும், தனது சொந்த காரணங்களுக்காக பதவி விலகியுள்ளதாகவும் கூறி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.