அதிமுக ஆட்சியை எதிர்க்க தமிழகத்தில் யாராலும் முடியாது – ஒ.பன்னீர்செல்வம்

இரட்டை இலையையும் அதிமுகவையும் தினகரனால் ஒருபோதும் கைப்பற்ற முடியாது என துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடந்த அதிமுகவின் 47-ம் ஆண்டு துவக்க விழா பொது கூட்டம் நடைபெற்றது. பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் சந்திர பிரபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சிறப்புரையாற்றிய அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதலமைச்சருமான ஒ.பன்னீர் செல்வம், அதிமுக ஆட்சியை எதிர்க்க தமிழகத்தில் யாராலும் முடியாது என்றார்.

அதிமுகவை தனிப்பட்ட குடும்பம் அபகரிக்க முயற்சி செய்ததாக கூறிய அவர், தினகரன் 48 எம்.எல்.ஏ க்களை குறிவைத்து அதிமுக ஆட்சியை கவிழ்க்க திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டினார்.

தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக நினைத்துக்கொண்டுள்ள தினகரன், தன்னுடைய ஜாதகத்தை வைத்துக் கொண்டு வீதிவீதியாக சென்று வருவதாக கூறினார்.

இரட்டை இலையும் அதிமுகவையும் தினகரனால் ஒருபோதும் கைப்பற்ற முடியாது என்று கூறிய அவர், அதிமுகவில் குழப்பத்தை உருவாக்க நினைப்பவர்களை கடைசி தொண்டன் கூட அடித்து நொறுக்குவான் என சூளுரைத்தார்.

காவிரி பிரச்சினை பற்றி குறிப்பிட்ட அவர்,காவிரி பிரச்சினையின் போது ஆட்சியில் இருந்த திமுக அதற்காக ஒன்றும் செய்யவில்லை என குற்றம் சாட்டினார். மேலும் தென் தமிழகத்தின் வாழ்வாதாரமான முல்லைப் பெரியாறு அணையை உயர்த்தியதும் அதிமுக ஆட்சிதான் என்று சுட்டிக்காட்டினார்.

தமிழகத்தில் திமுக இனி ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது என்றும் தமிழகத்தில் தினகரனும் திமுக தலைவர் ஸ்டாலினும் கூட்டு வைத்திருப்பதாகவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Exit mobile version