வழக்கு நிலுவையில் உள்ளதால், ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. ஜாக்டோ ஜியோ அமைப்பின் வேலைநிறுத்தம் தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, முதலமைச்சர் பேச்சு வார்த்தை நடத்தினால் போராட்டத்தை கைவிட தயார் என ஜக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்துப் பேசிய தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், ஏற்கனவே 3 முறை பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் பேச்சு வார்த்தை நடத்த முடியாது என்றும் வாதிட்டார்.
மேலும், 90% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாக தெரிவித்த அவர், தற்காலிக ஆசிரியர் பணிக்கு இதுவரை 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இதையடுத்து,மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இரு தரப்பும் முடிவெடுக்க வேண்டும் என நீதிபதி கிருபாகரன் வேண்டுகோள் விடுத்தார்.