நீங்க பிச்சை எடுக்க வேணாம் விஷால் பணத்தை திருப்பி வைச்சுடுங்க – சங்க உறுப்பினர்கள் ஆதங்கம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிதி மோசடி உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெறுவதாக கூறி சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டு சங்க உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக அச்சங்க தலைவர் விஷால் மீது சங்க உறுப்பினர்கள் தொடர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த முறைகேடுகள் தொடர்பாக விஷால் விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறி, சென்னை தியாகராய நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள், நடிகர் விஷால் இந்த பதவிக்கு வருவதற்கு முன்பு இந்த சங்கத்தில் இருப்பு தொகையாக 7 கோடியே 80 லட்சம் ரூபாய் இருந்ததாகவும் இப்போது இந்த பணம் சங்கத்தில் இல்லை என்றும் இது குறித்து விஷாலிடம் கேட்டால் அவர் ஷீட்டிங் என்று பல்வேறு ஊர்களுக்கு சென்று விடுவதாகவும், சங்க உறுப்பினர்களை மதிப்பதில்லை என்று குற்றம் சாட்டினர். சங்க பணம் விவரங்களை சங்க செயலாளர் கதிரேசனும் சரியான கணக்கு விவரங்களை உறுப்பினர்களிடம் சொல்லாததால் அவர்கள் அதிருப்தி அடைந்து தியாகராய நகரில் உள்ள சங்க கட்டிடத்திற்கு இன்று காலை கூட்டமாக வந்து பூட்டு போட்டு விட்டு சென்றுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட நடிகர் விஷால் உடல்நலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பிச்சை எடுக்கவும் தயங்கமாட்டேன் என்று கூறி இருந்தார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவே விஷால் ரூ.5 லட்சம் பெற்றார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். அடுத்தவருக்கு உதவி செய்ய இவர் பிச்சை எடுப்பாராம்.. ஆனால் தன் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களின் இருப்புத் தொகைக்கு இவரிடம் கணக்கு கேட்க நாங்கள் இவரிடம் பிச்சை எடுக்க வேண்டுமா என்று கொதிக்கின்றனர் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள். எங்கேயோ பதுங்கி உள்ள நடிகர் விஷால் இதற்கு தகுந்த பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் என்கிறது திரைத்துறை வட்டாரம்.

Exit mobile version