சட்டப்பிரிவு 370-வது நீக்கப்பட்ட பிறகு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு நடைபெறவில்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் காஷ்மீர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, 370ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்டால் காஷ்மீரில் ரத்த ஆறு ஓடும் என்று எதிர்க்கட்சிகள் கூறிய நிலையில், அப்படி எந்த ஒரு சூழலும் அங்குத் தற்போது நிலவவில்லை என்றார். தொலைத்தொடர்பு மற்றும் இன்டர்நெட் சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார். பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்படுவதாகவும், 144 தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளதாகவும், கல்லெறியும் சம்பவங்கள் காஷ்மீரில் நடைபெறவில்லை என்றும் அமித் ஷா தெரிவித்தார். காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி விட்டதாகவும், ஆப்பிள் விவசாயமும் வணிகமும் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி வருவதாகவும் அமித் ஷா விளக்கம் அளித்தார்.