எஸ்பிஐ டெபாசிட் இயந்திரங்களில் இருந்து பணம் எடுக்கும் வசதி தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்-களில் நூதன முறையில் கொள்ளை நடைபெற்றதைத் தொடர்ந்து, பணம் டெபாசிட் இயந்திரத்தில் இருந்து பணம் எடுக்கும் வசதி தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

சென்னை ராமாபுரம் வள்ளுவர் சாலையில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் ஒன்றரை லட்சம் ரூபாய் குறைவாக இருந்ததால், வங்கி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, கடந்த 17ம் தேதி மர்ம நபர்கள், பத்தாயிரம் ரூபாய் வீதம்,15 முறை பணம் எடுத்து மோசடி செய்தது தெரியவந்தது.

ஒவ்வொரு முறை பணம் எடுக்கும்போதும் ஷட்டரை பிடித்துக்கொண்டு நூதன முறையில் கொள்ளையடித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதேபோன்று, விருகம்பாக்கம், வேளச்சேரி விஜயநகர், தரமணி உள்ளிட்ட பகுதிகளில் 15 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதுதொடர்பான புகாரையடுத்து, 2 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள எஸ்.பி.ஐ. ஏடிஎம் மையங்களில் இருக்கும் டெபாசிட் இயந்திரங்களில் இருந்து பணம் எடுக்கும் வசதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.டி.எம் டெபாசிட் இயந்திரங்களில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாக, எஸ்.பி.ஐ. வங்கியின் தலைமைப் பொது மேலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பெசிய காவல் ஆணையர், இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் வடமாநிலத்தவர் என்றும், தமிழ்நாடு முழுவதும் 17 இடங்களில் 48 லட்சம் ரூபாய் வரை நூதன முறையில் கொள்ளை நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளதாக கூறினார்.

 

 

செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.ஐ. வங்கியின் தலைமைப் பொது மேலாளர் ராதாகிருஷ்ணன், குறிப்பிட்ட நிறுவனம் தயாரித்த டெபாசிட் இயந்திரத்தில் மட்டும் நூதன கொள்ளை நடைபெற்றிருப்பதாகவும், இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும், டெபாசிட் இயந்திரங்களில் பணம் எடுக்கும் வசதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

 

 

இதனிடையே, எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்தில் நூதன முறையில் கொள்ளையடித்தவர்கள் குறித்த துப்பு துலங்கியது.

ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் கொள்ளையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, வடமாநில கொள்ளையர்களை தேடி மூன்று தனிப்படைகள் விரைந்துள்ளன.

 

 

Exit mobile version