இன்று இரவு 7 மணிக்கு பிறகு எந்த வகையிலும் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது – தேர்தல் ஆணையம்

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரம் இன்று(04.04.2021) இரவு 7 மணியுடன் நிறைவு பெறுவதையொட்டி, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று இரவு 7 மணி முதல், வாக்குப்பதிவு நடைபெறும் நாளான 6ம் தேதி இரவு 7 மணி வரை, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 126ன் படி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு 7 மணிக்கு பிறகு தேர்தல் தொடர்பான கூட்டம் மற்றும் ஊர்வலம் நடத்தக் கூடாது என்றும், திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி, சமூக ஊடகங்களில், தேர்தல் தொடர்பான செய்திகளை வெளியிடக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடம், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் தங்கியுள்ள வெளியூர் நபர்கள், தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்றும், வாக்குச்சாவடிகளுக்கு வாக்காளர்களை அழைத்து வருவதற்கு வாடகை வாகனத்தை பயன்படுத்தக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

வேட்பாளர்களின் தற்காலிக பிரசார அலுவலகம், வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவிற்கு வெளியே இருக்க வேண்டும் என்றும் செய்திகுறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Exit mobile version