ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் விற்பனைக்கு மத்திய அரசு புதிய விதிமுறைகளை வகுக்கும் வரை ஆன்லைனில் மருந்து விற்பனை செய்ய கூடாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, ஆன்லைன் மருந்து விற்பனையாளர்கள் தரப்பில் நீதிபதிகள் சத்தியநாராயண் மற்றும் ராஜமாணிக்கம் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தனி நீதிபதியின் உத்தரவால், ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆன்லைன் மருந்து விற்பனையாளர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், ஆன்லைன் மருந்து விற்பனைக்கு, ஜனவரி இறுதிக்குள் விதிமுறைகள் வகுக்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தனிநீதிபதி விதித்த தடையை நிறுத்தி வைத்ததுடன், வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.