நிவர் புயல்: அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதலமைச்சர் நன்றி

தமிழக அரசின் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், நிவர் புயலால் ஏற்படவிருந்த பெருமளவிலான பாதிப்பிலிருந்து மக்கள் காக்கப்பட்டுள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் உரையாற்றிய முதலமைச்சர், நிவர் அதி தீவிர புயலால் தமிழகத்தில் பெருமளவு சேதம் ஏற்படாமல் தமிழக அரசு காத்துள்ளதாக தெரிவித்தார். இதற்கு உறுதுணையாக இருந்த அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர், அமைச்சர்களும் அதிகாரிகளும் நேரடியாக சென்று, மக்களுக்கு தேவையான உதவிகள் செய்ததை குறிப்பிட்டு, அவர்களுக்கு நன்றி கூறினார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில், ஒட்டுமொத்தமாக அனைத்துப் பிரிவுகளிலும். சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு, இந்தியா டுடே விருது பெற உழைத்த அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.

மேலும், கொரோனா தொற்று தடுப்பு பணிகளுக்காக, இதுவரை சுமார் 7 ஆயிரத்து 525 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், கொரோனா நோயை கண்டறிவதற்காக, அதிக அளவிலான ஆய்வகங்களை அமைத்து, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறினார். மொத்தமாக 15 ஆயிரம் மருத்துவப் பணியாளர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும், கொரோனா தடுப்பு பணிகளை தமிழகம்தான் சிறப்பாக மேற்கொள்வதாக பிரதமர் பாராட்டியதையும் முதலமைச்சர் அப்போது குறிப்பிட்டார்.

கொரோனா பரவலை தடுப்பது குறித்து பேசிய முதலமைச்சர், கோயில்கள், திருமணங்கள், நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், அரசு அறிவிக்கும் வழிமுறைகளை பொதுமக்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

கொரோனா பரவல் காலத்திலும், தொழில் சிறந்து விளங்க, 40 ஆயிரத்து 718 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளதாகவும், புதிய முதலீடுகள் மூலம், 74 ஆயிரத்து 212 பேருக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 11 ஆயிரத்து 520 கோடி கடன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version