புதுச்சேரி அருகே கரையைக் கடந்த நிவர் புயல் தற்போது வலுவிழந்து வருவதாக, வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். .
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிதீவிரமாக இருந்த நிவர் புயல் தீவிர புயலாக வலுவிழந்த நிலையில், புதுச்சேரி – மரக்காணம் அருகே கரையைக் கடந்ததாகத் தெரிவித்தார். மேலும், தீவிரப் புயலாக இருக்கும் நிவர், புயலாக வலுவிழக்கும் எனவும் கூறினார்.
நிவர் புயல் காரணமாக சாலையில் முறிந்து விழுந்த மரங்களை மாநகராட்சி ஊழியர்கள் உடனுக்குடன் அகற்றினர்.
நிவர் புயல் கரையை கடந்தபோது, சென்னையின் சில இடங்களில் சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால், அடையாறு, பெசன்ட் நகர், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மரங்கள் வேறோடு சாய்தன. தயார் நிலையில் இருந்த மாநகராட்சி ஊழியர்கள், மரங்களை அப்புறப்படுத்தினர்.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையிலான குழு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றன. மேலும், சாய்ந்த மின்கம்பங்களையும், அறுந்து விழுந்த மின்கம்பிகளையும் சீர் செய்யும் பணியில் மின் ஊழியர்கள் துரிதமாக ஈடுபட்டனர்.