விடியாத ஆட்சியில் அதிகாரிகள் அலட்சியத்தால் சொந்த வீடுகளில் குடியேற முடியாத நிலைமை

விடியாத அரசில், அதிகாரிகளின் அலட்சியத்தால், 4 மாதங்களாக குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த மழைநீரை அகற்றாததால், முகாமில் அகதிகள் போல் தங்கி இருக்கும் அவலம் நீடிப்பதாக கன்னியாகுமரி மாவட்டம் பாலமடம் பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நித்திரவிளை அருகே, ஏழுதேசம் பேரூராட்சிக்கு உட்பட்ட பாலமடம், பள்ளிதோட்டம், ஏலாக்கரை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் சுமார் 50 க்கும்
மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

தாழ்வான பகுதியான இங்கு தேங்கும் மழைநீரை வெளியேற்றும் வகையில் அமைக்கப்பட்ட வடிகால் ஒடைகள் ஆக்கிரமிக்கப்பட்டதால், கடந்த 4 மாதங்களுக்கு முன் பெய்த மழைநீர் இன்னும் வெளியேறாமல் வீடுகளை சூழ்ந்து காணப்படுகிறது.

இதனால் முகாம்களில் அகதிகள் போல் தங்கி வருவதாக இப்பகுதியினர் வேதனை தெரிவிக்கின்றனர்.

 

மேலும், நான்கு மாதங்கள் கடந்த பின்பும் இதுவரை இந்த மக்களுக்கு எந்தவித தீர்வும் ஏற்படுத்தி கொடுக்காமல் அரசு துறை அதிகாரிகள் மெத்தனமாக இருந்து வருவதாகவும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மழைநீர் தேங்கிக் கிடப்பதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு பல்வேறு நோய்கள் ஏற்படும் ஆபத்து நிலவுவதாகவும், நீலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் குடிநீர் மாசடைந்து உள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதேபோல், முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு எந்த வித அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்காமல் அவர்களை அங்கிருந்து விரட்டும் நோக்கிலும் அதிகாரிகள் செயல்பட்டு வருவதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி குடியிருப்பு பகுதிகளுக்குள் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்றி, இனிமேல் மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு ஏற்படுத்தவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version