மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக குற்றம்சாட்டப்பட்ட உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி வழக்கு வரும் 8-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக இருந்த நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரம் பேசியதாக எழுந்த புகாரில் சிக்கினார். இந்த விவகாரத்தில் அவருக்கு உடந்தையாக இருந்ததாக காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், முன்னாள் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் நிர்மலாதேவியுடன் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு அமர்வு நீதிமன்றத்தில் சனிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். மூவர் மீதும் எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.