நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை உறுதி

நிர்பயா வழக்கில், குற்றவாளி அக்சய் குமார் சிங்கின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

நிர்பயா வழக்கில் 4 குற்றவாளிகளில் ஒருவரான அக்சய் குமார் சிங், தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பானுமதி, அசோக் பூசண், போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அக்சய் குமார் சிங் சார்பாக ஆஜராக வழக்கறிஞர் ஏ.பி.சிங், குற்றம்சாட்டப்பட்டுள்ள அக்சய் சிங் ஒரு அப்பாவி என்றும், ஏழையான அக்சய் குமார் சிங் மீது குற்றங்கள் ஜோடிக்கப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார். இதனையடுத்து, நிர்பயா வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பைச் சீராய்வு செய்ய வேண்டிய தேவை இருப்பதாகத் தோன்றவில்லை எனக் கூறிய நீதிபதிகள், அக்சய் குமார் சிங்கின் சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்தனர். இதன் மூலம் நிர்பயா வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அக்சய் குமார் சிங் உட்பட 4 பேரின் தூக்குத் தண்டனை உறுதியாகியுள்ளது. கடந்த ஆண்டு மற்ற 3 குற்றவாளிகளின் சீராய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத் தக்கது.

Exit mobile version