நிர்பயா குற்றவாளிகளின் தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் உத்தரவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக, மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு மீதான உத்தரவை, டெல்லி உயர்நீதிமன்றம் இன்று பிறப்பிக்க உள்ளது.
நிர்பயா கொலை குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார், அக்ஷய் குமார் ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் தூக்குத் தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டிருந்தது. ஆனால், அதன் பிறகு அதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து மத்திய அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான மத்திய அரசின் மனு மீது விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில், நிர்பயாவின் பெற்றோர் தரப்பில் செவ்வாய்க்கிழமை முறையிடப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீது கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு விசாரணை நடத்திய பிறகு, தீர்ப்பை பிப்ரவரி 2-ஆம் தேதி ஒத்திவைத்திருந்த டெல்லி உயர்நீதிமன்றம், விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில், மத்திய அரசு மனு மீதான உத்தரவை, டெல்லி உயர்நீதிமன்றம் இன்று பிறப்பிக்க உள்ளது.