நிரவ் மோடியின் ஜாமீன் மனு மீண்டும் நிராகரிப்பு

வங்கி மோசடியில் ஈடுபட்டு லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிரவ் மோடியின் ஜாமீன் மனு மூன்றாவது முறையாக நிராகரிக்கப்பட்டது. மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.13 ஆயிரத்து 500 கோடி ரூபாயை கடனாக பெற்று, அதை திரும்ப செலுத்தாமல் வெளிநாடு தப்பி சென்றார். இது தொடர்பாக அவர் மீது இந்தியாவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவர் இங்கிலாந்தில் இருப்பதை அறிந்து, அவரை நாடு கடத்திக்கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது. அதன் ஒருபகுதியாக நிரவ் மோடி கைது செய்யப்பட்டு லண்டன் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரை நாடு கடத்தும் வழக்கு வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 2 முறை அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது முறையாக ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் நிரவ் மோடி மனு செய்தார். இதனை விசாரித்த வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம், ஜாமீன் மனுவை நிராகரித்துள்ளது. மேலும், வழக்கு விசாரணை வரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Exit mobile version