கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் நிலவிய நிபா வைரஸ் அச்சம் நீங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
காட்டுமன்னார்கோவில் அருகே மேலப்பூவிழுந்தநல்லூர் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்ற முதியவர் கேரளாவில் வேலை செய்து வந்தார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு பாம்பு கடித்ததால் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குணமடையாததால் சொந்த ஊருக்கு திரும்பிய ராமலிங்கம், காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். நிபா வைரஸ் தொற்று இருக்கலாம் என்று நினைத்த மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், ராமலிங்கம் குணமடைந்துள்ளார். அவருக்கு வந்தது சாதாரண காய்ச்சல் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் நிபா வைரஸ் காய்ச்சல் பீதியில் இருந்து காட்டுமன்னார்கோவில் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.