உதகை அருகே நடைபெற்ற படுகரின மக்களின் “ஒச அணா”பாரம்பரிய விழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.
மலை மாவட்டமான நீலகிரியில் தொதநாடு, பொரங்காடு, மேற்குநாடு, குந்தெசீமை ஆகிய நான்கு சீமைகள் உள்ளன. சுமார் 400-க்கும் மேற்பட்ட கிராமங்களில் படுகர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் மேற்கு நாடு சீமையில் உள்ள 33 படுகர் இன மக்களின் கிராமங்கள் உள்ளன. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்கள் , இப்பகுதியில் நிலங்களுக்கு வரி வசூலித்து வந்துள்ளனர். அவர் அதற்காக பாலசெவனன் என்பவரை கிராம நிர்வாக அலுவலராக நியமித்து அதற்கு சான்றாக அரசு முத்திரை ஒன்றையும் வழங்கியுள்ளனர்.
இந்த பாரம்பரிய நிகழ்வை தற்போது வரை படுகர் இன மக்கள் கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று உதகை அருகே உள்ள பாலகொலா கிராமத்தில் ஒச அணா என்ற வினோதமான விழா நடைபெற்றது. இன்று காலை பாலசெவனன் குடும்பத்தின் 12-வது தலைமுறையை சேர்நதவர் அரசு முத்திரையை வைத்து விநாயகருக்கு விநோத பூஜை செய்தனர்.
பின்பு அவர்கள் அந்த கிராமத்திலுள்ள புல் மைதானத்திற்கு வந்தனர். அங்கு 33 கிராமங்களை சேர்ந்த ஊர் தலைவர்கள் ஒவ்வொருவாராக வந்து அந்த முத்திரை, மற்றும் குண்டு மணி முன்பு தங்களது கிராமத்திலுள்ள நிலங்களுக்கு ஏற்ப வரிகளை ஒவ்வொருவராக செலுத்தி அந்த முத்திரையை வணங்கி ஆசி பெற்றனர். அதனையடுத்து படுகர் இன மக்கள் தங்களுடைய பாரம்பரிய உடையணிந்து வட்டவடிவமாக நின்று பாரம்பரிய நடனத்தை ஆடி மகிழ்ந்தனர்.
இங்கு வசூல் செய்யப்படும் தொகையானது அவர்களின் குல தெய்வ கோயிலுக்கு ஒப்படைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை நிறைவடைந்ததையடுத்து இனி வரும் நாட்களில் அறுவடை பணி தொடங்க உள்ளது குறிப்பிடதக்கதாகும்.