நீலகிரி மாவட்டத்திற்கு உடனடி நிவாரணமாக 30 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டதால் மீட்பு பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதை சுட்டிக் காட்டியுள்ள முதலமைச்சர், பாதிக்கப்பட்ட மக்கள் 67 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவத்துள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்று நோய் பரவாமல் தடுக்க கிருமி நாசனி குளோரின் தெளிக்கப்பட வேண்டும்.
உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருப்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். பகுதியாக சேதமடைந்த ஆயிரத்து 225 குடிசைகளுக்கு தலா 4 ஆயிரத்து 100 ரூபாயும், முழுமையாக சேதமடைந்த 296 குடிசைகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டி தரப்படும் என்றும், சேதமடைந்த உட்கட்டமைப்புகளை நிரந்தரமாக சீரமைக்க தேவைப்படும் நிதி தொடர்பாக மத்திய அரசிற்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்திற்கு உடனடி நிவாரணத்திற்காக 30 கோடி ரூபாயை மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டிருப்பதாக முதலமைச்சர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.