நீலகிரி மாவட்டம் கூடலூரில் இரண்டு மாதங்களுக்கு மேலாக ஊதியம் வழங்காத தனியார் தேயிலை தோட்ட நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட தாய்சோலை என்ற தனியார் தேயிலை தோட்டம் இயங்கி வருகிறது. சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள தேயிலை தோட்டத்தில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தொழிலாளர்கள் வசிப்பதற்காக தேயிலைத் தோட்டத்தின் நடுவே குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், கடந்த 2 மாதமாக ஊதியம் வழங்காமல் இருப்பதாகவும், வருங்கால வைப்பு நிதியை கையகப்படுத்தியுள்ளதாகவும் தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தங்கள் குடியிருப்புக்கு 5 நாட்களாக குடிநீர் வழங்கவில்லை என்றும் தொழிலாளர்கள் கூறியுள்ளனர். கடந்த 13ம் தேதி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், பேச்சுவார்த்தை நடத்த இன்றும் தேயிலை தோட்ட நிர்வாகத்தினர் வரவில்லை எனக் கூறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த காவல்துறையினர், நிர்வாகத்துடன் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறியதை அடுத்து, தொழிலாளர்கள் கலைந்துச் சென்றனர்.