இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் தளர்வுகளை அளித்துள்ள தமிழக அரசு, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.
தொலைத்தொடர்பு மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவம், நிதி, போக்குவரத்து மற்றும் பிற முக்கியமான சேவைகளின் பின்தள செயல்பாடுகளை ஆதரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
பொருட்களை ஏற்றுதல், இறக்குதல் மற்றும் சேமித்தல் உள்ளிட்ட நவடிக்கைகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
விலக்கு அளிக்கப்படாத தொழிற்சாலைகளைப் பொறுத்தவரையில் தீ பாதுகாப்பு, இயந்திர பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு நோக்கங்களுக்காக முழு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளான மருந்துகள், துப்புரவு பொருட்கள், ஆக்ஸிஜன், மருத்துவ சாதனங்கள், மருத்துவ ஜவுளி உற்பத்திக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
கோழி, செல்லப்பிராணிகள் வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட உணவு தொடர்பான தொழில்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உரங்கள், விவசாய இயந்திரங்கள் மற்றும் அவற்றின் கூறுகள் உள்ளிட்ட விவசாய உள்ளீடுகளின் உற்பத்திக்கு அனுமதிக்கப்படுகிறது.
அனைத்து ஏற்றுமதி தொழிற்சாலைகள், நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் தொடர்ந்து செயல்படும் தொழிற்சாலைகளான சுத்திகரிப்பு நிலையங்கள், எஃகு ஆலைகள், சிமெண்ட் ஆலைகள், வேதியல் தொழிற்சாலைகள், சர்கரை ஆலைகள், டயர் உற்பத்தி தொழிற்சாலைகள், காகித ஆலைகள், ஜவுளி தொழிற்சாலைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.